இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமன்றி பரந்த உலகமெங்கிலும் பெருவாரியான மக்களால் அடையாளங் காணப்படும் பல்லாயிரக்கணக்கான நபர்களுள் ஒருவர் 'மகாத்மா காந்தி'. பெரும்பாலும் அவர் இந்திய அரசின் வருடாந்திர கொண்டாட்டங்களாலும், பொது விடுமுறையினாலும், புழங்கி வரும் பணக் கத்தைகளாலும், வீதியில் நிற்கும் சிலைகளாலும், பாடப் புத்தகங்களாலும் மட்டுமே வெளியுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார்.
இதைத் தவிர்த்து, காந்தியின் ஞானமார்கத்தையும் ஒப்பில்லா அஹிம்சை முறை போராட்டத்தையும் சமய சீடர்களின் புராண ஆசிரியர்கள் அவ்வப்போது பாராட்டுவதும் -- அவரை ஒரு ஞானியாக பிம்பப்படுத்துவதும் சற்றே இயல்பானது.
சத்யா கிரஹ போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காக வெகுவாக பாராட்டப்பட்ட காந்தி, அஹிம்சைவழி போராட்டத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்திருக்கிறார்.
செவ்வென அவர் இந்திய துணைக்கண்டத்தின் தந்தையாகவும் சந்தேகமின்றி போற்றப்படுகிறார்.
சுருங்கக் கூறின்.. இந்தியாவின் பிம்பத்தை உலக நாடுகளுக்கு மத்தியில் தவிர்க்க இயலாதபடி நிலைநிறுத்தியதற்கு, காந்தியின் உழைப்பு இன்றியமையாத பதார்த்தமாக இருந்திருக்கிறது.
இன்றைய தினத்தில் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நாம் அனுசரித்திருக்கும் வேளையில், என்னுடைய இந்தக் கட்டுரை அம்பேத்கரின் கண்ணாடி அணிந்த கருங்கண்களின் வழியாக ஊடுருவி கைத்தடிப் பிடித்த காந்தியைப் படம்பிடித்துக் காட்ட முயன்றிருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதுகெலும்பாக கருதப்படும் அம்பேத்கர், காந்தியைப் பற்றி - அதாவது மகாத்மா பற்றி எந்தவித அபிப்பிராயம் கொண்டிருந்தார்? 1955-ல் பிபிசி நிறுவனத்திற்கு அவரளித்த பேட்டி ஒன்றில் அது புலப்படுகிறது. "காந்தி எப்பொழுதும் மகாத்மாவாக இருந்ததில்லை. அவரை மகாத்மா என்று நீங்கள் அழைப்பதை நான் மறுக்கிறேன்!"
அந்தப் பேட்டியின் வாய்மொழி சுருக்கம் யூடியூபில் இன்றும் கேட்கக்கிடைக்கிறது. அதில் அம்பேத்கர் சொல்கிறார், "காந்தி ஒரு சீர்த்திருத்தவாதி அல்ல. இந்திய வரலாற்றில் காந்தியும் ஒரு அத்தியாயம்! அவ்வளவே. சகாப்தம் என்று கூறுவதெல்லாம், மிகைப்படுத்தலே அன்றி வேறல்ல!"
மகாத்மா குறித்தான அம்பேத்கரின் பண்புருவு வருணனையை காந்தியவாதிகள் சிலர் 'சர்ச்சைக்குரிய முடிபு' என்று புறங்கையால் ஒதுக்கிவிடுகின்றனர். ஆனால் அரசியல் எதிரி என்பதையும் தாண்டி, அம்பேத்கரின் வருணனையில் காந்தி மீதான தருக்க ரீதியான கருத்தியில் கோட்பாடும், கொள்கை முரணும் அப்பட்டமாகவே வெளிப்படுகிறது என்று நான் வாதாடுகிறேன்.
காந்திய தத்துவத்தின் சமூக மற்றும் பொருளாதார கோட்பாடுகளை ஆர அமர கரைத்துக் குடித்த பின்னர்தான், அம்பேத்கர் இம்முடிவிற்கு வந்திருக்கிறார். "காந்தியக் கொள்கை அபாயகரமானது" என்று சொல்வதற்கு அவர் நாவை மட்டும் பயன்படுத்தவில்லை, புத்தியையும் சேர்த்தே பயன்படுத்தியிருக்கிறார்.
சாதிய பிரிவினையின் மூலந்தான் முன்மாதிரியான சமூகத்தை அமைக்க முடியுமென காந்தியக் கொள்கை பரிந்துரைக்கிறது. 1922 வரையுமே, காந்தி ஒரு கண்மூடித்தனமான சாதிய ஆதரவாளராகவே இருந்திருக்கிறார். சாதியில் சமூக நீதிக்கொள்கை செழித்தோங்குவதாக நம்பியதோடு, சாதிமுறையிலான பாகுபாடுகள் தொடர்வதையும் வெளிப்படையாகவே விரும்பினார்.
காந்தி எதற்கெல்லாம் இந்தக் கருமத்தைத் தூக்கிப் பிடித்தாரென்றால்..
"ஹிந்து சமயத்தின் ஆன்மா, சாதியில் தான் சங்கமித்துள்ளது; சுயராஜ்ஜியத்திற்கான வித்து சாதியில் தான் உள்ளது; மக்களை ஒன்றிணைக்கும் சக்தி சாதியில் தான் உள்ளது; அடிப்படைக் கல்வி பெறும் வழிவகை சாதியில் தான் உள்ளது; நம்மைப் பாதுகாக்கும் சக்தி சாதியில்தான் உள்ளது; சுய கட்டுப்பாடு சாதியில் தான் உள்ளது; சாதியென்பது சமூகத்தில் இயற்கையாகவே அமைந்த ஒரு பாசக்கட்டளை. எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தை நடத்தி வருகிற பரம்பரைத் தொழில்முறை சாதியில்தான் உள்ளது."
என்பதையெல்லாம் அவர் நம்பினார்..
இப்படியாக சாதியின் தேவையை உணர்ந்துகொண்ட காந்தி, "என்னைப்பொறுத்தவரை இதுதான் சாதி. சாதி மீதான என்னுடைய பார்வை தெள்ளத்தெளிவாக இதுவேதான். ஆக வெளியிலிருந்து யாரெல்லாம் சாதியை எதிர்க்கிறார்களோ, அவர்களையெல்லாம் நான் எதிர்க்கிறேன்!" என்றொரு தடாலடி போட்டார்.
சில ஆண்டுகளில், தன்னுடைய சொற்பிரயோகத்தை சமயோசிதமாக மாற்றிக்கொண்ட காந்தி 'சாதியை தூரவீசிவிட்டு வர்ணத்தை கையிலெடுத்துக் கொண்டார்'
1925 வாக்கில், சாதிக்கு பதிலாக வர்ணமே தன்னுடைய ஆஸ்தான முன்மாதிரி சமூகத்தின் கோட்பாடாக விளங்கும் என்று அம்பலப்படுத்தினார். சமூகத்தில் நசுக்கப்பட்ட தாழ்ந்த சாதியினர் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கே உரித்தான நான்கு வர்ணங்களுக்குள் மீண்டும் அடைபட்டுக் கொள்ள அழைப்பு விடுத்தார்.
ஆதிகால வழக்கில் இருந்த வர்ணாசிரம தர்மத்தில் அந்தணர் மேலாக, க்ஷத்திரியர், வைஷியர், சூத்திரர் முறையே ஒன்றின் கீழ் ஒன்றாக இருக்கும்படியாக நசுங்கிப்போன நீதியை எழுதிவைத்திருந்தனர். அந்தணர்கள் படிக்க, க்ஷத்திரியர்கள் போர் செய்ய, வைஷியர்கள் பண்டமாற்ற, இம்மூவருக்கும் சூத்திரர்கள் சேவகம் செய்ய வேண்டுமென அந்நீதி(?) கூறுகிறது.
காந்தியின் சாதியப் பிடியிலிருந்து நழுவி வந்த வர்ணமுறையிலும், எந்தவொரு நடைமுறை மாற்றமும் இல்லாததைக் கண்ட அம்பேத்கர் முற்றும் மனம் சோர்ந்து ஏமாந்துப்போனார். சாதியிலிருந்த அதே குலத்தொழிலை இந்த வர்ணமுறை, வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்கிறதென அம்பேத்கர் நம்பினார். அது உண்மையுங் கூட..
காந்தியக் கோட்பாட்டுக்குள் கோடுபோட்டு வாழ்ந்தாலுங் கூட, சூத்திரனின் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் வரப்போவதில்லை, நாளடைவில் தலீத்துகளும் சூத்திர வர்ணத்தில் சேர்க்கப்படும் அபாயம் உண்டென அம்பேத்கர் அஞ்சினார். இவரின் நவீனத்துவ பார்வையால் காந்தியப் பொருளாதாரக் கோட்பாடும் எதிர்க்கப்பட்டது.
பொதுவாகவே காந்தி மெஷின்களுக்கு எதிரானவர். நவீன கலாச்சாரத்தை அடியோடு வெறுத்தார். மறுமுனையில் அம்பேத்கரோ "மெஷின்களால் மனித உழைப்பிற்கு ஓய்வு கிடைக்கும். இது கலாச்சாரம் நிலைப்பதற்கு இன்றியமையாதது. ஓய்வு என்பதே இல்லையென்றால, மனித வாழ்க்கையின் பயன்தான் என்ன?" என்று வாதாடினார்.
காந்தியின் 'பொறுட்பாட்சி மன்றம் (Trusteeship)' வெளிப்படையாகவே தொழிலாளி - முதலாளி வர்க்க ரீதி போராட்டத்தை நீர்த்துப் போகும்படி செய்தது. தானொரு தேர்ந்த பொருளியல் அறிஞர் என்பதால், ஏழைகளின் உரிமையை பணக்கார வர்க்கத்திடம் ஒப்படைக்க அம்பேத்கர் விரும்பவில்லை.
அவர் காந்தியத்தை, "பழமைவாதத்தின் உச்சபீடம்" என்ற வசையால் புகழ்கிறார். மேலும் அது, "வசதி படைத்தவர்களுக்கும், வசதியை தக்கவைத்துக் கொள்வதற்கும், ஏழைப் பங்காளர்கள் வசதி படைத்தவர்களிடமிருந்து வசதியை பறித்துக்கொள்ளா வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்குமே இந்தக் கொள்கை" என்று எச்சரித்துள்ளார்.
காந்தியக் கொள்கை என்பதே வசதி படைத்த உயர் வகுப்பினருக்கானது என பீம்ஜீ முடிவு செய்தார். அதை இன்றும் காந்தியக் கொள்கையை தூக்கிப் பிடித்துவரும் உயர் சாதி வகுப்பினரை கருத்திற் கொண்டே நாம் ஊகித்து உணரலாம்.
இப்படி ஒவ்வொன்றாக பதிலளித்து வரும் அம்பேத்கர், காந்தியக் கொள்கை சனநாயக தேசத்திற்கு முற்றிலும் முரணானது என்று நிறுவுகிறார். தானொரு தாழ்ந்த சமூகத்தின் பிரதிநிதியாக இருந்து, காந்தியின் உயர் சாதி பிராமணிய கோட்பாட்டை சுக்குநூறாக்குவதில் அம்பேத்கர் நடுநிலை தவறவில்லை. அவர்களுக்குள் உண்டான விரிசல் தனிப்பட்ட வாய்க்கால் வரப்பு தகராறு அல்ல, மாறாக இந்தியாவினூடாக படர்ந்துள்ள சாதிய வேரின் இருவேறு பார்வை முரண்.
இன்றைய காலகட்டத்தில், சந்தேகத்திற்கு இடமின்றி காந்தியப் பார்வையும் அதைவிட அதிகமாக அம்பேத்கரிய பார்வையும் பிரித்திசையாது தேவைப்படுகின்றன.
பிராமணிய சமூகத்தில் வாழ்ந்ததாலேயே, எந்தவொரு உள்நோக்கம் இல்லாவிட்டாலும் தனித்த ஒருவருடைய பார்வை எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது என்பதை அறிய காந்தி தேவைப்படுகிறார். சாதி என்கிற சாத்தான் தலை-மேல் ஏறிக்கொண்டு தேசத்தையே ஆட்டுவித்தாலும், வலுமையான பிராமணிய கோட்பட்டை எப்படி எதிர்த்தார் என்பதை அறிய பீம்ஜி தேவைப்படுகிறார்.
--
கார்த்திக் இராஜா கருப்புசாமி,
தி வயர்டு வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரை.
--
தமிழில் :
சதீஸ் செல்வ குமார்.